தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Thursday, December 25, 2008

உண்மை


சமையல்காரர் ருசிபார்த்தபின்
மிச்சத்தில் பசியாறுகிறார்:
முதலாளி

பாரம்பரியத்தின் விலை


வெறும் ஆயிரம் விலைபோனது
நூறு ஆயிரம் கரு சுமந்த
மரம்

மூன்றாம் சாதி !


"சாதி இரண்டொழிய வேறில்லை"
மற்றொன்றும் உண்டு:அது
ஏமாறும் சாதி

Monday, December 8, 2008

பேருந்து


இல்லாதவரிடம் எதிர்பார்த்து எதிரே
இருப்பவர் நிற்கிறார் :எழுந்தவுடன்
இடம் பிடிக்க

தொழிலே தெய்வம்


கார்த்திகை மாதம்
கறிக்கடையில் இறைச்சி வெட்டும்
ஐயப்ப சாமி

சமத்துவம்


குப்பனுக்கும்,குப்புஸ்வாமிக்கும்
சரிசமமாய் ஒரே இருக்கை:
பேருந்தில்

சேமிப்பும் அவலம் !


இன்றே சேமித்துவைக்கும்
இந்தியக் 'குடி'மகன்:
நாளை காந்தி ஜெயந்தி

சம்"மதம்" !


ஆலயம்,பள்ளி,கோவிலில்
எம்மதமும் சம்மதம்:
வாசலில் பிச்சை எடுக்க

அன்பளிப்பு ?


மனமுவந்து கொடுத்தது
இன்று கட்டாயமானது:
அன்பளிப்பு

என்ன செய்யலாம்?


கட்டணம் போக நம் பணம்
மீதி கேட்டால் முறைக்கிறார்:
நடத்துனர்

சிறப்பு தரிசனம்


பத்து ரூபாய் இருந்தால்
பக்கத்தில் பார்க்கலாம்:
கடவுளை

தன்னம்பிக்கை


உயர்ந்த மரத்தின் மீதிருந்தாலும்
பறவை நம்பியிருக்கிறது :
அதன் சிறகை

Sunday, December 7, 2008

தன்னாலான உபகாரம்-2


நிமிர்ந்து நின்ற பேனா
கவிழ்ந்ததும் நிமிர்த்தியது:
கவிழ்த்தியவனை

தன்னாலான உபகாரம்-1


கவிழ்ந்து நின்ற கோப்பை
நிமிர்ந்ததும் கவிழ்த்தியது:
நிமிர்த்தியவனை

Friday, November 14, 2008

இட ஒதுக்கீடு


33% கேட்டுப் போராடும்
தலைவர் வீட்டில் வேலைக்கு
100% பெண்கள்

தாய்மையின் ஏக்கம்


வைக்கோல் கன்று காட்டி
பாசத்தை காசாக்கும் நோக்கத்தில்
மூழ்கிப்போனது பசுவின் ஏக்கம்

தவறு யாரிடம்?


கடவுள் நினைத்து,விரதம் இருந்து
தரிசிக்கப்போகும்போது விபத்தில்
சாகும் பக்த்தர்கள்

கையேந்தும் மனம்


காய்கறிக்காரியிடம் கையேந்தும்
மாடிவீட்டு மகராசி:கூடுதல்
கறிவேப்பிலைக்காக

எதிர்பார்த்து


சவப்பெட்டியை மூடிய
உடனே திறந்தனர்:
உயில் பெட்டியை

துருப்புச் சீட்டு


ஆள்பவரை வெளியேற்ற
ஆள நினைப்பவரின் அரசியல்:
ஆண்டவன் பெயரால்

இருப்பிடம்


ஊரு குளத்தில்,வீட்டுக் கிணற்றில்
தோட்டத்தில் தொட்டிக்குள்:
நிலா

பாதுகாப்புடன் ?


களவாவதைத் தடுக்க
கட்டப்பட்டுள்ளது சங்கிலியால்
காவல் நிலையத்தில் : டம்ள்ர்

ஆண் பாவம்


விலங்கில் பறவையில்
ஆண் அழகு.நாம் மட்டும்
பாவமாய்

பயணச் சீட்டு


நடத்துனர் கொடுப்பார்
எப்போதாவது மொத்தமாய்
ஓட்டுனரும்:டிக்கெட்

பாசம்


அப்பாவுக்கு நெஞ்சுவலி
எங்களோடு கதறிக்கொண்டே
அவசர ஊர்தி

நம்பிக்கை


எல்லோரும் எண்ணிப் பார்க்கிறார்கள்
யாருமே நம்பவில்லை:
பணத்தை

பொது அறிவு


காந்தின்னா தாத்தா
சுதந்திரம்ன்னா லீவு
வேறென்ன தெரியும் நமக்கு

ஏக்கம்


"இனியொரு விதி செய்வோம்"
சொல்லிகடந்தது ஒரு நூறாண்டு:
இனியாவது செய்வோம்

செருப்பு


பண்ணையார் தெருவில்
பாதம் தகிக்கும் வெயிலில்
செருப்பு கைகளில்

Sunday, October 19, 2008

தன்னை உணர்


தரம் அறியாமல்,உண்மை
நிலை அறியாமல் பிச்சை
எடுக்கிறது:யானை

கடமை


ஒருநாளில் இருமுறை சரியாய்
நேரம் காட்டிடும் கடிகாரம்
நின்ற பிறகும்

நடைமுறையில் பிழை


பெருமை படுத்தும் தபால்தலை
மறுநாளே கரைபடுத்தும்
தபால் நிலையம்

Monday, October 13, 2008

யாருக்கு கல்யாணம்?


காத்திருக்கிறார்கள் முதிர்கன்னிகள்
மழை வேண்டிக் கல்யாணம்;
கழுதைக்கு

கலி யுகம்


புதுமனைப் புகுவிழா
முதியோர் இல்லத்தில் பெற்றோர்
அழியும் நாகரிகம்

உள்ளே ஊனம்


ஊன்று கோல் பயணம்
இடம் மறுக்கும் இளைஞன்
அது 'ஊன்முற்றோர் இறுக்கை"

வாழ்க்கை


கலங்கி தெளிந்தால்
தான் இனிக்கும்:
வாழ்க்கை

நம் தேசம்


நீர் மறுக்கும்,உரிமை பறிக்கும்
சுற்றங்கள்.அழியும் அடையாளமாய்
நம் தேசம்

நின்றாவது கேட்க்குமா?


கோவிலுக்குள் கொள்ளை கண்முன்னால்
தட்டிக் கேட்க்காமல் அமைதியாய்
கடவுள்

ஏழையின் சமயலறை


"பொருளாதாரம் உயர்வு"அரசு அறிவிப்பு
எப்போதும்போலவே ஏழையின் சமயலறை
"அடுப்பில் தூங்குது பூனை"

காலத்தின் கோலம்


கலக்கத் தண்ணீர் இல்லை
கலங்கி இருக்கும்
பால்க்காரன்

உயிர் பயம்


காட்டுக்குள் மனிதன்
கலங்கி நின்றன;
மரங்கள்

தொப்புள் கொடி


காடுகளை அழித்தனர்
சாலைகளால் இணைத்தனர்
அறுந்தது;தொப்புள் கொடி

கண்ணாடி


காலை எழுந்தவுடன் உலகம்
தன் முகம் பார்க்கும் கண்ணாடி
புல் நுனி பனித்துளி

சந்தர்ப்பம்


வாய்ப்பு கிடைத்தால்
சூரியனையே மறைத்திடும்
தெருப்புழுதி

உன் சாவி யாரிடம்?


அப்பாவுக்கு கொள்ளிவைக்க
அனுமதி கேட்டுக் காத்திருக்கிறேன்
கிடைக்க்கவில்லை : விசா

கடமை


நிழல்
தருகிறது மரம்
வெட்டுகிறவனுக்கும்

பச்சோந்தியின் தேசப்பற்று


இந்தியா முன்னேற வேண்டுகிறேன்
கூடுதல் பணிக்கு இடையிலும்:
அமெரிக்காவிலிருந்து

ஆக்கிரமிப்பு


குளம் முழுவதும் வீடுகள்
அல்லியைத் தேடி அலைகிறது;
நிலா

மாற்றி காத்திருத்தல்


சாயக்கழிவு.தற்கொலைக்குத்
தயாராகி கொக்குக்காக காத்திருக்கின்றன:
மீன்கள்

செறுப்பு


இந்தக் கோடையிலாவது பையனின்
ஆசையை நிறைவேற்ற அய்யாவுக்கும்
ஆசை:செறுப்பு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter